Tuesday, September 16, 2008

திருமண விநோதங்கள்



அபுதாபியிலிருக்கும்போது கல்ஃப் நியூஸில் ஒரு செய்தி பார்த்தேன். மொத்தமாக திருமண விழா நடந்ததாக ஒரு புகைப்படம் வந்தது. எல்லோரும் ஆண்கள். இது எனக்கு பழைய ஒரு நிகழ்வை நினைவு படுத்தியது.

--------------------------------------------
கிராமத்துலேயே பிறந்து வளர்ந்ததால, கல்லூரிக்கு வந்தபிறகுதான் மொத மொதல்லே முஸ்லிம் நண்பர்கள் கிடைச்சாங்க. மத்தபடிக்கு அவங்க பழக்கவழக்கமெல்லாம் எனக்கு சுத்தமா தெரியாமலே இருந்தது ரொம்ப வருஷம் வரைக்கும். அப்படியிருக்கும் போது ஒரு கல்யாணத்துக்கு அழைப்பு வந்தது.


வடபழனியிலே பெரிய கல்யாண மண்டபத்துலே நம்ம நண்பர் நியாஸுக்கு கல்யாணம்னு அழைச்சிருந்தாரு. சரீன்னு என் வீட்டம்மாவை அழைச்சிக்கிட்டு போயிருந்தேன். மனைவியோட போயிருந்ததால தெரிஞ்சவங்கள்லாம் பக்கத்துலெ வரல்லெ. (பயமில்லீங்க.. ஒரு நாகரீகம்தானுங்ணா..) தூரயிருந்தே விஷ் பண்ணிட்டு ஒதுங்கிக்கிட்டாங்க.


கல்யாண மேடைக்கு முன்னாடி அஞ்சாவது வரிசையிலே போய் உக்காந்துட்டோம். மாப்பிள்ளை வந்து மேடையிலே உக்காந்துட்டாரு. ஒரு பெரியவரு வந்து மைக்கிலே சடங்குகளை நடத்துனாரு. நேரமாயிட்டே இருந்தது. நானும் என் மனைவியும் சுத்தி சுத்தி
பார்த்துக்கிட்டேயிருந்தோம். திடீர்னு மைக் அமைதியானது. மடமடன்னு ஆளுங்கள்லாம் எழுந்து சாப்பாட்டு அறைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க.


எங்களுக்கு சங்கடமா போயிட்டது. என்னமோ தப்பு நடந்துடிச்சோ. பதட்டத்தோட மாப்பிள்ளைகிட்ட போனோம். "என்ன நியாஸ்... ஒண்ணும் பிரச்சனையில்லையே?"ன்னு சொன்னேன், மெதுவா.


அவருக்கு சரியா கேக்கலே. "ரொம்ப நன்றி. இருந்து சாப்டுட்டுதான் போகணும்"

"சரி கல்யாணம் முடியட்டும். இப்போ என்ன அவசரம்" என்றேன்.

"சார், கல்யாணம்தான் முடிஞ்சுடிச்சே. நீங்க சாப்பிடப்போங்க.... அப்துல்லா.. சாரை சாப்பிடக் கூட்டிட்டு போ..."

"என்ன... கல்யாணம் முடிஞ்சிட்டுதா... பொண்ணே வரலியே... ஏதாவது பிரச்சனையான்னு கேக்கத்தான் வந்தேன். நீங்க கல்யாணம் முடிஞ்சுடிச்சுன்னு சொல்றீங்க.... ஒண்ணும் புரியலியலியே..."



நியாஸூக்கு புரிந்துவிட்டது. "அப்துல்லா.. சாருக்கு என்ன விவரம்னு சொல்லு..." என்றார் சிரிப்பை அடக்கியபடி.

அப்புறம்தான் தெரிஞ்சது இந்த நடைமுறையெல்லாம். திரும்பி வீட்டுக்கு வந்த பிறகும் இது எங்களுக்கு அதிசமாயிருந்தது. மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் தனித்தனியே கல்யாணமா? ரெண்டுநாளைக்கு இதப்பத்தியே பேசிக்கிட்டு இருந்தோம்.

சரி. அவங்க மதத்தைச்சேர்ந்த வழக்கம். நமக்கு புதுசா பாக்குறதாலே விதியாசமாயிருந்தது. மத்தபடி அதெல்லாம் மதிக்கப்பட வேண்டிய, மரியாதை செய்யப்பட வேண்டிய சமாசாரம்தானே.

இப்போதும் எப்போதாதாவது சந்திக்கும்போது இதை நினைவுபடுத்தி நியாஸ் சிரிப்பார்.

----------------------------------------------------------------------------

அப்போதான் முன்னாடி நடந்த எங்க ஊர் நண்பன் திருப்பதியோட கல்யாணம் நினைவுக்கு வந்தது.

மதுரையிலே கல்யாணத்துக்கு முந்துனநாள் சயந்திரமே எங்க நண்பர்கள் கூட்டமா போயிட்டோம். நடு ராத்திரி ஒரு மணி வரைக்கும் சீட்டாட்டம் நடந்தது. விடியக்காலையிலே கல்யாணம்ங்கிறதாலே எல்லாம் படுத்துட்டோம். நாலு மணிக்கு எழுப்பிவிட்டங்க. மாப்பிள்ளையெ காணல்லே.

"மாப்பிள்ளைக்கு அலங்காரம் நடக்குது. நீங்கள்லாம் குளிச்சுட்டு ரெடியாயிடுங்க தம்பிகளா.."ன்னு ஒரு பெரியவர் சொன்னார்.

முகூர்த்த நேரம் வந்துட்டது. இன்னும் மாப்பிள்ளையை இன்னும் காணலே. நாங்கள்லாம் சுத்தி சுத்தி பாத்துக்கிட்டு இருந்தோம்.

"என்னடா தேடுறீங்க..."ன்னு ஒரு குரல் கேட்டது.

நம்ம திருப்பதியோட குரல்தான். ஆனா ஆளைத்தான் காணலே. அப்போதுதான் பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த பரதேசியை கவனித்தேன். இதோ நம்மாளு. நெத்தியிலே ரெண்டு கலர்லே திருப்பதி வெங்கடேச பெருமாள் போல பெரிய அளவுலே நாமம். போதாததுக்கு நெஞ்சுலெ வேறே அதை விட ரெண்டு மடங்கா இன்னோரு நாமம். தலையிலே ஒரு பெரிய முண்டாசு. வெத்து உடம்புலே இடுப்புலே வெள்ளையா
வரிஞ்சகட்டின வேட்டி மட்டும் பளிச்சுன்னு இருந்தது. அவங்க சமூக வழக்கமாம்.



எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு. "எண்டா இவ்வளோ பெரிய நாமத்தெப் போடத்தான் ரெண்டு மணிக்கே ஒன்னிய கூட்டிட்டு போனாய்ங்களா... யாருடா இதை போட்டுவிட்டாய்ங்கெ?.. நம்ம ராமசாமி கொத்தனாரா... அவருதானே சொவத்துக்கு நல்லா
வெள்ளையடிப்பாரு..... "

திருப்பதியை நாங்களெல்லாம் டிப்டாப்பா பாத்துதான் பழக்கம். மாப்பிள்ளைக்கு கண்ணெல்லாம் கலங்கியிருந்தது. ஒண்ணும் பேசமுடியலே.

கல்யாணம் முடிஞ்சவுடன் அடுத்து போட்டோ எடுத்துக்கொண்டோம். போட்டோகிராஃபரும் எங்க நண்பர்தான். "கொஞ்சம் சிரிங்கப்பா.." என்று சொல்லவேண்டியவர் "சிரிக்காம நில்லுங்கடா... எருமைகளா.." என்று திட்டிக்கொண்டேயிருந்தார்.

--------------------------------------------


மாமனார் ஊருக்கு மறுவீட்டுக்கு போய்விட்டு ஒரு வாரம் கழிச்சி திருப்பதி நாங்கள்லாம் வழக்கமா கூடுற இடத்திற்கு வந்தார். கல்யாண போட்டோவை எங்களிடம் கொடுத்தார். நாங்களும் ஆவலுடன் புரட்டி பார்த்தோம். எல்லா படமும் ஒரே ஷேக்காகி இருந்தது.

"என்னடா இப்பிடி ஆயிடுச்சி..."

"போங்கடா... நாயிங்களா... நீங்க சிரிச்சி சிரிச்சி நாசம் பண்ணுனதாலே..... அந்த போட்டோ பிடிக்கிறவனும் சிரிச்சி தொலைச்சிருக்கான்...." என்றார் பாவமாக.

Sunday, March 11, 2007

கொலவெறி சிரிப்பு

நாம் எதிர்பார்த்த ஒன்று, எதிர்பாராத வகையில் வித்தியாசமாக நடந்துவிட்டால் (நம்மை பாதிக்காத வரையில்) விழைவது சிரிப்புதான்.



சர்ச்சிலை ஒரு உணவகத்தில் பார்த்த ஒரு பெண், மிகுந்த வெறுப்புடன் "நான் மட்டும் உன் மனைவியாக இருந்திருந்தால் உன் காஃபியில் விஷத்தைக் கலந்து கொடுத்திருப்பேன்" என்றாள்.
சர்ச்சில் சொன்னார், "அம்மணி, நிலைமை அப்படியானால் நான் அந்த காஃபியை மகிழ்ச்சியுடன் குடித்திருப்பேன்"


இதில் சர்ச்சிலிடம் நாம் எதிர்பார்த்தது கோபம். அது மாறி வரும்போது விழைவது கண்ணியமான நகைச்சுவை.




சிரிப்புக்களை பலவகைப் படுத்தியிருக்கிறர்கள். சில சிரிப்புகள் நம்மையே படுத்தி எடுத்துவிடும். அது வேற விஷயம்.

கடி ஜோக்ஸ், வாழ்வியல் சிரிப்புகள், போலி ஆன்மீகர்கள் சிரிப்பு, அரசியல் சிரிப்பு, சர்தார்ஜி சிரிப்புகள், இப்போது லல்லு சிரிப்புகள், லொள்ளு சிரிப்புகள்..... இது போல பல வகை உண்டு. இதெல்லாம் எதுக்கு... சிரிப்புன்னு சொல்லி எதை சொன்னாலும் சிரித்துவிட்டு போகவேண்டியதுதானே என்கிறீர்களா..... அதுவும் வாஸ்தவம்தான்.




இதெல்லாம் போக 'கொல வெறி சிரிப்பு' (sick jokes) என்றும் ஒரு வகை உண்டு. (sikh jokes இல்லை). இவை சாதாரண சிரிப்புடன் ஒரு வித பதைப்பையும் ஏற்படுத்துபவை. நம்ம ஊர்லே அவ்வளவாக இது கிடையாது என்று நினைக்கிறேன்.




"இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் வறுமையை ஒழித்துவிடுவோம்" என்று சுதந்திரம் பெற்றது முதல் நம்ம அரசியல்வாதிகள் சொல்லி வருவதும் இந்த வகையில் சேர்ந்ததுதான். என்னை இந்த வகை சிரிப்பில் இழுத்தது பழைய சிரிப்பு ஒன்று:


-- காட்டுமிராண்டியின் மகன் "அப்பா.. அம்மா உன்னை சாப்பிட கூப்பிடறா....."


இதுபோல சில கொலவெறி சிரிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொல்லுகிறேன்.




--------------------

டொக்... டொக்...
"யாரது?"
"அம்மா.. உங்க வீட்டுக்காரர் மேலே ரோடுரோலர் எறிடுச்சி.... பாடியை கொண்டு வந்திருக்கோம்"
"நான் குளிச்சிட்டு இருக்கேன். அதை கதவுக்கு அடியில் தள்ளி விட்டுட்டு போங்க..."


---------------------


"சார்... உங்க மேலே காரை ஏத்தியவரை அடையாளம் காட்ட முடியுமா?"
"இல்லை.. ஆனா.. அந்த பொம்பளையின் அட்டகாசமான அந்த சிரிப்பை என்னால் அடையாளம் காண முடியும்..."


---------------------


"அம்மா... அம்மா... அண்ணன் மேலே தீ பிடிச்சி எரியுது.. "
"சரி.. நீ போயி உடனே ஹீட்டரை ஆஃப் பண்ணு. கரண்ட்டை வேஸ்ட் செய்யக்கூடாது."


-----------------------


"இருந்தாலும் அவனுக்கு பயங்கரமான மாறுகண்"
"எப்படி சொல்லுறே''
"பின்னே.. இந்த கண்ணுலே அழுத கண்ணீர்.. அந்த கன்னத்திலே வழியுது பார்"


----------------------


"ஐயோ.. என்னப்பா.. உன்னோட ஒரு கை மெஷின்லெ மாட்டி துண்டாயிடுச்சி... என்ன நடந்தது?"
"ஒண்ணுமில்லே.... நான் இப்படி கையை நீட்டிக்கிட்டே இப்படி திரும்புனேனா.... ஐயோ... இதோ அடுத்த கையும் போயிடிச்சி...."


---------------------




ஆப்பிரிக்க காட்டில் காட்டுவாசிகளிடம் மாட்டிக்கொண்டவனை பெரிய சட்டியில் போட்டு கீழே நெருப்பு வைத்துவிட்டார்கள். அப்போது அங்கே வந்த அவர்களது தலைவனை பார்த்ததும்தான் அவனுக்கு உயிர் வந்தது.
"டேய்.. நீயா.. என்னத்தெரியலியா... உன் கூட ஆக்ஸ்ஃபர்ட்லே படிச்சேனே.... நீ இன்னுமா நரமாமிசம் சாப்பிடறே... நாகரீகமாக மாறலியா?"
"நாங்கள்லாம் இப்போ ரொம்ப நாகரீகமாயிட்டோம்ல. இப்போ உன்னைக்கூட நாங்க ஸ்பூன், ஃபோர்க் வச்சிதான் சாப்பிடப்போறோம்.."


-----------------------


"மேடம்.. உங்க கணவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறேன். இன்னும் ஒரு மாதத்தில் இறந்து விடுவார்..."
"போங்க டாக்டர்... என்னை சந்தோஷப் படுத்த இப்படியெல்லாம் பொய் சொல்லாதீங்க..."


-----------------------





"நேற்றைக்கு பத்தாவது மாடியிலிருந்து நம்ம குமார் விழுந்துட்டான்"
"ஐயோ.. என்ன ஆச்சி.."
"நல்ல வேளையா நேரா கீழே ஒரு வைக்கோல் ஏத்துன வண்டி இருந்தது"
"அப்பாடா.."
"ஆனா.. அதிலே ஒரு கடப்பாரை நீட்டிட்டு இருந்தது"
"ஐயோ.. அப்புறம்?"
"நல்ல வேளையா அது கொஞ்சம் தள்ளிதான் இருந்தது"
"அப்பாடா.. "
"ஆனா... அவனுக்கு நேரா ஒரு பாம்பு இருந்தது"
"ஐயோ.. "
"நல்ல வேளையா அந்த பாம்பு செத்துப்போயிருந்தது"
"அப்பாடா.."
"ஆனா.... அந்த வண்டி நகர ஆரம்பிச்சிடிச்சி... ஏய்.. ஏன் ஓடறே...


-----------------------

Sunday, March 4, 2007

மாத்தி யோசி - 3



ஞாயிற்றுக் கிழமையும் காலையும் அதுவுமாக கந்தசாமி வேகமாக என் வீட்டைப் பார்த்து வருவது ஜன்னல் வழியே தெரிந்ததும் கலவரமாகி விட்டேன். இருந்தாலும் என்ன செய்ய. நாலாவது மாடியிலிருந்து குதிக்கவா முடியும். இதுதான் ambush warfare என்பதா?


"வாங்க.. வாங்க.. என்ன இவ்வளவு தூரம்.... சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே?"

"சும்மா சொல்லாதிங்க தம்பி. வாங்கின 5000 ரூபாயை போன வாரமே கொண்டுவந்து தர்றதா சொன்னீங்க. இது வரை வரல்ல. அதான் உங்க வீட்டு காலண்டர் சரியாத்தான் இருக்காண்ணு பாத்துட்டுப் போகலாமுன்னு வந்தேன்.. ஹி.. ஹி.."

"சரீ.. சரீ.. உங்க நக்கல் புரியுது. என் நிலமை அப்படி. கோயிச்சுக்காதீங்க."

"சரி விடுங்க தம்பி. இன்னும் ரெண்டு நாளையிலே கொடுத்துடுங்க."



"தம்பி, அது என்ன பல வண்ணத்துலே சின்ன சின்ன கட்டைகளா இருக்கு. எடுங்க பாப்போம்."

"அது பையன் கொண்டாந்து வச்சிருக்கான். எதுக்குண்ணு தெரியலே. இதே வேலயாப் போச்சி. கிருக்குப்பய மவன்"

"உங்க பையனாச்சே.... அதுலே நாலு கட்டையை எடுங்க. ஒரு விளையாட்டு இருக்கு."

"சரி வாங்க. சும்மா சீரியலை பாத்து அழுதுட்டிருக்கிற கொடுமைக்கு.. உங்க கூட பேசிட்டு இருக்கலாம். என்னண்ணு சொல்லுங்க. கட்டையை எடுத்து ஒண்ணொண்ணா பக்கத்து வீட்டிக்காரர் சொட்டத்தலையிலே போடணுமா.."



கந்தசாமி சீரியசாகி விட்டார். "தம்பி, உங்க fantasyலே நான் தலையிட மாட்டேன். வாங்க... இந்த நாலு வண்ண கட்டைலே சிவப்பு, நீலம் இரண்டையும் ஒண்ணை ஒண்ணு தொடுர மாதிரி வைங்க பாக்கலாம்."



"இதோ வச்சிட்டேன். சரியா?"

"சூப்பர். இப்போ அந்த பச்சை நிற கட்டையை எடுத்து, சிவப்பு, நீலம் ரெண்டையும் தொடற மாதிரி வைங்க பாக்கலாம்.."

கொஞ்ச நேரம் யோசித்து பிறகு கண்டுபிடிதேன். "என்னுடைய மூளைக்கு தகுந்த மாதிரி சொல்லத் தெரியலியே உங்களுக்கு. இது சொத்தை மேட்டர்" என்று சொல்லிவிட்டு சரியாக வைத்து விட்டேன்.



"ரொம்ப சரி. இப்போ அடுத்த ஆரஞ்சு கட்டையை எடுத்து, முந்தைய மூணு கட்டையையும் தொடற மாதிரி வைங்க... முடியுமா..."

இப்போது சிக்கல்தான். எப்படி வைத்தாலும் ஏதாவது இரண்டு கட்டைகளைத்தான் தொடுகிறது. மூளையை போட்டு குழப்பிக்கொண்டிருந்தேன்.

"என்ன தம்பி... முடியலையா?"

இது என்னோட ஈகோவை தொட்டது. "இல்லெ.. இந்தமாதிரி புதிர்லாம் நான் ரொம்ப ஈசியா போட்டுருவேன். இன்னைக்கு கொஞ்சம் தலையை வலிக்கற மாதிரி இருக்கு. நாளைக்கு பாக்கலாமா?"

அப்போது விளையாடி விட்டு வந்த என் பையன் "என்ன அங்கிள்.. இது என்ன விளையாட்டு? நானும் வரலாமா?" என்றான்.

கந்தசாமி விளக்கினார். பையன் கட்டைகளையே பார்த்துக் கொண்டிருந்தவன், சடாரென்று ஆரஞ்சு கட்டையை எடுத்து மற்ற மூன்று கட்டைகளின் மேல் வைத்து "சரியா அங்கிள்?" என்றான். கந்தசாமி கைதட்டினார்.



"இது தப்பாட்டம். ஏமாத்தறீங்க. நான் ஒத்துக்கமாட்டேன். கட்டையை மேலே வைக்கலாம்னு சொல்லலியே.."

"மேலே வைக்கக்கூடாதுன்னு சொன்னேனா? நீங்களா ஏன் ஒரு கற்பனையான வரைமுறை வைச்சிக்கிட்டீங்க? இதனால உங்க மூளை குண்டுச் சட்டிக்குள்ளே குதிரை ஓட்டிக்கிட்டு இருக்கு.. இப்போ இன்னொரு விளையாட்டு... வர்ரீங்களா... இல்லேன்னா உங்க பையனோட விளையாடட்டுமா?"

மீண்டும் என் ஈகோவுக்கு சவாலா? "அவன் ஏதோ ஃப்ளூக்ல ஒரு தடவை சரியா சொல்லிட்டான். மத்தபடிக்கு அவன் என்னளவுக்கு வரமுடியாது. அவன் அவங்கம்மா மாதிரி.. சரி வாங்க விளையாடலாம்.."

கந்தசாமி ஒரு பேப்பரை எடுத்து புள்ளிகள் வைத்தார். "இப்போ இந்த ஒன்பது புள்ளிகளையும் கையை எடுக்காமல், நாலே நாலு நேர் கோடுகளால் இணைக்கணும். செய்யுங்க பாப்போம்.."



சரியாக என்னை என் பையன் முன்னாடி மாட்டிவிட்டுட்டார் கந்தசாமி. அவன் மூஞ்சியிலே ஒரு மாதிரியான சிரிப்பு வேறே. நம்மளை பெரிய லூசுன்னுல்ல நெனச்சிடுவான். இந்த சவால்ல ஜெயிச்சே காட்டிடணும்.

"கந்தசாமிண்ணே.. இப்போதான் ஞாபகம் வந்தது. கரண்டு பில் கட்டணும். இன்னைக்கு கடைசி நாள். இந்த விளையாட்டெ நாளைக்கு வச்சிக்கலாமா?"

"அப்பா.. நேத்திக்கே அம்மா கட்டியாச்சி... இந்த விளையாட்டுக்கு விடை சொல்லுங்க... ஓடாதிங்க..." என்றான் தவமிருந்து பெற்ற அருமை வாரிசு.

"எங்கே... நீங்க சொல்லுங்க பாப்போம்..." பதிலுக்கு சவால் விட்டேன்.

கந்தசாமி சிரித்துக் கொண்டே சுலபமாகக் கோடு போட்டுவிட்டார்.



"கோடு ஏன் வெளியிலே போகுது. தப்பு. தப்பு. இது சீட்டிங். நான் ஒத்துக்க மாட்டேன்.."

"கோடு வெளியே போகக்கூடாதுண்ணு ஒண்ணும் கண்டிசன் இல்லையே. நான் முன்னே சொன்ன மாதிரி, இல்லாத வரைமுறைகளை நீங்களாக கற்பனை செய்யக்கூடாது. அது உங்கள் யோசிக்கும் திறனை ஒரு குறுகிய கட்டத்துக்குள் அடக்கி விடும்."



"இப்போ எனக்கு ஒண்ணு ஞாபகத்துக்கு வருது. எங்க ஊர்ல ஒருத்தர் பந்தயம் வச்சாரு. தேங்காய மேலே தூக்கிப்போட்டு, அது கீழே வரும்போது குடுமியை சரியாக பிடிக்கணும்னு. பந்தயத்துலே ஒருவன் ஜெயிச்சுட்டான். எப்படி?... தூக்கிப்போட்ட தேங்காய் கீழே வரும்போது பக்கத்துலெ இருந்தவன் குடுமியை பிடிச்சுட்டான்.. யார் குடுமியைன்னு சொல்லலியே... அது போலத்தானா இதுவும்...?"

"ஒரு வகையிலே அப்படியும் வச்சுக்கலாம். சரி மிச்சத்தை நாளைக்கு வச்சிக்கலாம்"

நாளைக்குமா... நாளைக்கு வெளியூர் எங்கேயும் போகலாமா... இல்லைன்னா.. ஆஃபிசுக்குள்ளெயே தங்கிடலாமா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.



In dealing with situations or problems, many things have to be taken for granted. In order to live at all, one must be making assumptions, all the time. Yet each of these assumptions is a cliche pattern which may be restructured to make better use of available information. In addition, the restructuring of more complex patterns may prove impossible, unless one breaks through some assumed boundary.


------- Edward De Bono.

Wednesday, February 28, 2007

முதல் பதிவு



எனது முதல் பதிவை பகவத் கீதையிலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன்.


"ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் மனநிறைவின் பொருட்டு முயலுகிறான்.
முயலுகின்ற பெரு வாய்ப்புள்ளோர்களுள் யாரோ ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்."




"யோக மாயையினால் நன்கு மூடப்பட்டுள்ள நான் எல்லோருடைய அறிவுக்கும் எட்டுவதில்லை.
பிறவாத அழியாத என்னை இந்த மூட உலகம் அறிவதில்லை"




"குந்தியின் புதல்வா, இறுதிக்காலத்தில் எப்பொருளை எண்ணிக்கொண்டு ஒருவன் உடலை உகுக்கிறனோ,
எப்பொழுதும் அப்பொருளை பவிப்பவனாகிய அவன் அதையே அடைகிறான்."




"தூய்மைப் படுத்துபவைகளில் காற்றாகவும், ஆயுதம் பிடித்தவர்களில் ராமனாகவும்,
மீன்களுள் நான் மகரமாகவும், நதிகளுள் கங்கையாகவும் நான் இருக்கிறேன்."

மாத்தி யோசி - 2



என்னக் கொடுமை சரவணன். யார் கண்ணில் படக்கூடாது என்று ஒளிந்து கொண்டு திரிந்தாலும், அவர் வந்து என் எதிரே நிற்பது என்பது எனக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. வேறே யாரு.. நம்ம அண்ணன் கந்தசாமிதான்.


"என்னா தம்பி. என்ன இப்படி. ஞாயித்துக்கிளமையும் அதுவுமா.... காலங்காத்தாலே...."

"என்னண்ணா இது. சரவணபவனுக்கு உள்ளே இருந்து கேக்குற கேள்வியா இது....."

"சாப்பிடத்தான்னு தெரியுது. ஏன்... வீட்டிலே கஞ்சி ஊத்தமாட்டேனுட்டங்களா? எனக்கு முன்னாலேயே தெரியும், ஒரு நாள் இப்படி நடக்குமின்னு. அடி பலமா.. உங்களுக்கு"

"அதெல்லாம் நீங்க நினைக்கற மாதிரி ஒண்ணுமில்லெ. அம்மா வீட்டுக்கு கொஞ்ச நாளைக்கு போகனுமின்னு சொன்னாங்க. ரெண்டு நாளைக்கு முன்னாலதான் அனுப்பிச்சேன். குறைகால சந்தோசம்தான்."



"சரி சரி வருத்தப்படாதீங்க. என்ன ஆர்டர் பண்ணியிருக்கீங்க? அதையே எனக்கும் சொல்லிடுங்க தம்பி."

"எனக்கு பிடிச்சதெல்லாம் இட்லியும் வடையும்தான். இங்கே வந்தா நான் எப்பவும் அதுதான். உங்களுக்கும் சாப்பிட அதையே சொல்லிடறேன்."

"ஏன் வேற எதையும் சாப்பிட மாட்டீங்களா?"



அடடா. சொந்த செலவில் சூனியம் வச்சிக்கிறது என்பது இதுதான். இனிமேல் சாப்பிட வேற ஏரியாதான் போகணும் போலிருக்கு. யாரு பெத்த பிள்ளையோ.. நம்மளையே சுத்தி சுத்தி வர்றாரு.

"ஏந்தம்பி... வேறே எதையாவது சாப்பிட்டு பாக்கலாமில்லையா..."

"அண்ணே. சாப்பிடும்போது பேசக்கூடாதுண்ணு பெரியவங்க சொல்லியிருக்காங்க. வேணாம். விட்டுடுங்க. அழுதுருவேன்."

"தம்பி... அதான் இட்லி இன்னும் வரலியே. கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம்."

"எனக்கு இட்லிதான் பிடிக்கும். அதனாலேதான் வேற எதையும் பத்தி யோசிக்கறது இல்லை." ரொம்ப கண்டிப்பாக சொல்லிவிட்டேன்.



சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டேன். 'யோசிப்பது' பத்தி நானே ஆரம்பித்து விட்டேன். இது எங்கே போய் முடியுமோ. இன்னிக்கு நான் மவுனவிரதம்.. யாரோடெயும் பேசுறது இல்லெ.. என்று சொல்லி தப்பிக்கவும் முடியாது. கந்தசாமி இதுக்கும் ஏதாவது கணக்கு வைத்திருப்பார்.

"ஒரு பேச்சுக்கு வச்சிக்குவோம். இட்லி இல்லைனா என்ன பண்ணுவீங்க?"

"அப்போ நீங்க சொன்னா மாதிரி 'மாத்தி யோசிச்சி' தோசை சாப்பிடுவேன்."

"இது 'மாத்தி யோசி' இல்லை. காலத்தின் கட்டாயம். யாராயிருந்தாலும் இதைத்தான் செய்வாங்க. இட்லி கிடைக்கும்போதே வேற ஐட்டத்தை யோசிக்கணும். ஒரு வேளை அது இட்லியை விட உங்களுக்கு ரொம்ப பிடிச்சுப் போயிடலாம் இல்லையா."



தொடர்ந்தார் கந்தசாமி. "வீட்டுலே ஆள் இல்லைன உடனே ஓட்டலைத்தானே நினைச்சீங்க. ஏன், வேற மாதிரி யோசிக்கலே?"

"அண்ணே... அந்த மாதிரி முறை தவறி போற ஆள் நானில்லை."

"தம்பி, நான் அப்பிடி சொல்லலை. அப்பிடி சொல்லமாட்டேன் என்பதும் உங்களுக்கு தெரியும். நான் சொல்வது என்னன்னா, நீங்களே லைட்டான ஐட்டம் எதையாவது செய்ய முயற்சி செய்யலாமில்லையா? எத்தனையோ ready to use பொருட்கள் கிடைக்குதே."

"ஆமாண்ணே. இது எனக்கு தோணாமலே போயிடுச்சே. என்ன இருந்தாலும் இங்கத்தி டேஸ்ட் வருமா?"

"கொஞ்ச நாள்லே பழகிடுமே. ஒண்ணு சமையல் நல்லா வரலாம். அல்லது அந்த கொடுமையே உங்களுக்கு பழகிடலாம். எப்படீன்னாலும்... காசு மிச்சம்தானே."



"ஆமா கந்தசாமி அண்ணே. நீங்க சொல்லறதும் சரிதான். செலவு அத்துக்கிட்டு போகுது. ஆனாலும் நீங்க சொல்லுறதுலேஒரு சிக்கல் இருக்கு. ஒரு வேளை சமையல் நல்லா பழகிடுச்சின்னா நம்ம கையிலே கரண்டியைக் கொடுத்துடுவாங்களே."

"ஆமா தம்பி. இது யோசிக்க வேண்டிய விசயம். எதுக்கும் ஒரு பாதுகாப்பாத்தான் இருந்துக்கணும். நம்ம வீட்லேயும் ஒரு மார்க்கமாத்தான் இருக்காக. இருந்தாலும் இதுக்கும் 'மாத்தி யோசி' போட்டுட வேண்டியதுதான்.

ஆஹா. இனிமேலும் பொறுப்பதில்லை. "அண்ணே. இட்லி வந்திடுச்சி. இனிமே பேசக்கூடாது. அப்புறம் ஒண்ணு... நான் சாப்பிட்டு முடிச்சதும் மௌன விரதம் ஆரம்பிக்கப் போறேன். யாரோடயும் பேசறது இல்லை."



"அதனாலே என்ன தம்பி. நீங்க பேசாம இருங்க. நான் பேசிட்டே இருக்கேன். பல விசயங்களை உங்களுக்கு சொல்லணுமில்லையா."

"அய்யோ அண்ணே... நான் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க... நான் இன்னிலிருந்து 'கேட்கா விரதம்'னு புதுசா ஆரம்பிக்க போறேன். யார் பேசுவதையும் கேட்கக்கூடாது."

"பரவாயில்லை தம்பி. இதுக்கும் மாத்தி யோசிச்சா வழி கிடைக்கும்.... ஐயோ தம்பி... என்ன தம்பி... மிளகாயை கடிச்சிட்டீங்களா..... கண்ணுலே இருந்து தண்ணியா வடியுது?... ஏன் உடம்பெல்லாம் குலுங்குது?"




A pattern may persist because it is useful and adequate and yet a restructuring of the pattern could give rise to something very much better.



The natural inclination is to search for alternatives in order to find the best one. In lateral thinking however the purpose of the search is to loosen-up rigid patterns and to provoke new patterns.



----- Edward De Bono

மாத்தி யோசி - 1



ஒரு நாள் நண்பர் கந்தசாமி கேட்டார் "தம்பி.. தினமும் ஆபிஸுக்கு எப்படி போறீங்க?"


நான் சொன்னேன் "ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் ப்ளஸ். புதுசு. லிட்டருக்கு 80 கிலோ மீட்டர் கொடுக்குது. நம்ம ரெண்டுபேரும்தானே போய் வாங்கியாந்தோம்."

"நான் அதைக் கேக்கலே. எந்த ரூட்லே வருவீங்க"

"அசோக் பில்லர் வந்து, பிறகு பவர் ஹவுஸ், ஆர்காட் ரோடு, லயோலா, காலேஜ் ரோடு, பாந்தியன் ரோடு பிறகு சிந்தாதிரிபேட்டை."

"வேறே எதும் ரூட் உண்டா?"

"இந்த வழியிலே டிராபிக் ஜாமாகி இருக்குண்ணு மிர்ச்சி சுசித்ரா சொன்னாங்கண்ணா, வேற ரூட்."

"எந்த வழி?"

"அயோத்யா மண்டபம், துரைசாமி சப்வே, ஜி என் செட்டி சாலை, அண்ணா சாலை, சிம்ப்சன்."




"வேறே ரூட் உண்டா?"

"என்னண்ணா வெளையாடறீங்க. வேற வழி எதுக்கு. இந்த ரெண்டு வழியுமே நல்லா இருக்கு. சீக்கிரமாவும் போயிடலாம், சில நாட்களைத் தவிர."

"இல்லை. சும்மாவாச்சும் வேற வழியை யோசிச்சிருக்கீங்களா?"

"அதுக்கு அவசியமில்லையே. இப்போ எனக்கு இந்த வழிகள் ரொம்ப பழக்கமாயிட்டது. வீட்டுலே வண்டியை எடுத்தேன்னா, வண்டி ஆட்டோமேட்டிக்கா ஆஃபிஸ் வந்து சேர்ந்துடும். பல சமயங்களிலே எந்த வழியிலே வந்தேன், எந்த சிக்னல்லே நின்னேன் என்பது எனக்கே தெரியாது. ஒருவிதமான reflex energyலே வந்துருவேன்"




"அப்போ உங்க மனசுலே என்ன நினைச்சுட்டு இருப்பீங்க?"

"அது எனக்கே தெரியாது. சில சமயங்கள்லே இடிக்கறமாதிரி போறவனை மனசுக்குள்ளே திட்டியிருப்பேன். இடது பக்கம் ரொம்ப சாஞ்சிட்டு போற கர்ப்பமான ப்ஸ்ஸை பார்த்து கொஞ்சம் கலவரமாயிருக்கும். வேற ஒண்ணும் விசயமிருக்காது. பெரும்பாலான நாட்கள்லே வந்து சேரும்போதே சோர்வாக இருக்கும். பாதி தூக்கமே வந்துடும்னா பாருங்களேன்"

"அதுக்கெல்லாம் காரணம், நீங்க உங்க மூளையை தூங்க வச்சிடறீங்க தம்பி. மூளையை யோசிக்கவே விடறதில்லையே. எல்லாமே reflexலேயே போயிட்டா மூளையிலே ஒட்டடை படிஞ்சுடும்"




"அதுக்கு நான் என்னண்ணா செய்யச் சொல்லுறீங்க"

"வழக்கத்தை விட்டு வெளியே வரணும். புதுப்புது வழிகளில் போக முயற்சி செய்யணும். சமயத்துலே அதுவே ரொம்ப வசதியான ரூட்டா கூட இருக்கலாம். அப்படி போகும்போது புதுப்புது காட்சிகளை பார்க்கலாம். புதுப்புது மனிதர்களை காணலாம். மூளை உங்க வசமிருக்கும். இந்த வழக்கமெனும் சோம்பல் நீங்கும். மனசும் சுறுசுறுப்பாயிருக்கும்"

"ஆஹா... என்னண்ணா இது... லேகியம் விக்கிறவனெப் போலெ ஆரம்பிச்சுட்டீங்க. சரி, ஆஃபீஸ் போற சாதாரணமான விசத்துக்கு இவ்வளவு மெனக்கெடனுமா?"




"இது சும்மா ஒரு உதாரணத்துக்குதான் தம்பி. இந்த மாதிரி வாழ்க்கையின் எல்லா விசயங்களுக்கும் இந்த மாதிரிதான் யோசிக்கப் பழகணும்."

"அப்புறமா கீழ்பாக்கத்துலே ரூம் போட்டுடவேண்டியதுதான். ஆமா... இதெல்லாம் என்னண்ணா? உங்களுக்கு என்ன ஆச்சி? நீங்க எப்போவும் இப்படித்தான் யோசிப்பீங்களா?"

"இப்படி யோசிக்கதான் முயற்சி செய்யறேன். இது மாதிரி யோசிக்கிறதுக்கு 'மாத்தி யோசி'ன்னு பெயர் சொல்லலாம்."

"மாத்தி... யோசியா... ஆரம்பிச்சுட்டாருய்யா.... இது பாய்ஸ் படத்துலே வர்ற பாட்டு மாதிரியில்லே இருக்கு"



"அதேதான். இதைத்தான் ஆங்கிலத்துலே lateral thinking னு சொல்லுவாங்க. இந்த மாதிரி யோசிக்கறது முதல்லே வித்தியாசமாயிருந்தாலும் போகப்போக இதுவே பழக்கமாயிடும். இதைப்பத்தி பிறகு விரிவாக சொல்லுறேன். நாளைக்குப் பாக்கலாம்."

"நான் இப்போவே மாத்தி யோசிக்கப்போறேன். நண்பனை மாத்தினா என்னண்ணு ரொம்ப தீவிரமா யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். இருக்கற இத்தீனி மூளையையும் கொழப்பி கொழம்பு வைக்க நான் தயாரில்லே. வர்ட்டா....."



Lateral thinking is about changing patterns



While acknowledging the usefulness of the patterns created by mind one uses lateral thinking to counter arrogance and rigidity.


----- Edward De Bono

சீனாவில் ஒரு ஈஸ்வரன்



சீனாவில் ஒரு ஈஸ்வர்


சீனாவில் உள்ள ஒரு கோவிலைப்பற்றிய ஒரு பகுதியை படிக்கக் கிடைத்தது. அதில் உள்ள இறைவனின் பெயர் “அவலோகிதேஸ்வர்”.

அந்த ஈஸ்வர பெயருக்கு என்ன அர்த்தமோ. ஆனால் அது புத்தரை குறித்தது என்பது கண்கூடு.

அந்த விக்கிரகத்தைக் கண்டவுடன் நமக்கு தோன்றுவது, அந்த சாந்தமே வடிவான முகத்தைக்கண்டு நமக்கும் மன அமைதியா? …. அல்லது… அந்த ஆயிரம் கைகளைக் கண்டு அச்ச உணர்வா? …அல்லது… சிலையின் அழகைக் கண்டு ஆனந்த பிரமிப்பா?

எதுவானாலும் அந்த சிலையை வடித்தவர் இறையருள் பெற்றவராகத்தான் இருக்கமுடியும். இதுவே நமது ஊராக இருந்தால் முக்கால பூஜைகளும், திருவிழாக்களும் நடந்திருக்கும். பாவம் சீனாவாகப் போய் விட்டது. (நம்ம ஊரிலும் அநாதையாக விடப்பட்ட விக்கிரகங்கள் நிறைய என்பது வேறு விசயம். J)

என்ன செய்ய. எந்த ஊரில் எந்த கடவுளாக இருப்பது என்பதை நிர்ணயிக்க அந்தந்த இறைவனுக்கே குடுப்பினை வேண்டுமோ?



Temple in Sichuan Province



Buddhism first arrived in China during the Later Han dynasty and quickly took root, spawning temples like this one to Avalokitesvara.

The Communists eliminated organized religion when they took power in 1949, and most temples were converted to secular uses.

The constitution of 1978 restored some religious freedoms, and Christian and Buddhist groups are now active in China.