
அபுதாபியிலிருக்கும்போது கல்ஃப் நியூஸில் ஒரு செய்தி பார்த்தேன். மொத்தமாக திருமண விழா நடந்ததாக ஒரு புகைப்படம் வந்தது. எல்லோரும் ஆண்கள். இது எனக்கு பழைய ஒரு நிகழ்வை நினைவு படுத்தியது.
--------------------------------------------
கிராமத்துலேயே பிறந்து வளர்ந்ததால, கல்லூரிக்கு வந்தபிறகுதான் மொத மொதல்லே முஸ்லிம் நண்பர்கள் கிடைச்சாங்க. மத்தபடிக்கு அவங்க பழக்கவழக்கமெல்லாம் எனக்கு சுத்தமா தெரியாமலே இருந்தது ரொம்ப வருஷம் வரைக்கும். அப்படியிருக்கும் போது ஒரு கல்யாணத்துக்கு அழைப்பு வந்தது.
வடபழனியிலே பெரிய கல்யாண மண்டபத்துலே நம்ம நண்பர் நியாஸுக்கு கல்யாணம்னு அழைச்சிருந்தாரு. சரீன்னு என் வீட்டம்மாவை அழைச்சிக்கிட்டு போயிருந்தேன். மனைவியோட போயிருந்ததால தெரிஞ்சவங்கள்லாம் பக்கத்துலெ வரல்லெ. (பயமில்லீங்க.. ஒரு நாகரீகம்தானுங்ணா..) தூரயிருந்தே விஷ் பண்ணிட்டு ஒதுங்கிக்கிட்டாங்க.
கல்யாண மேடைக்கு முன்னாடி அஞ்சாவது வரிசையிலே போய் உக்காந்துட்டோம். மாப்பிள்ளை வந்து மேடையிலே உக்காந்துட்டாரு. ஒரு பெரியவரு வந்து மைக்கிலே சடங்குகளை நடத்துனாரு. நேரமாயிட்டே இருந்தது. நானும் என் மனைவியும் சுத்தி சுத்தி
பார்த்துக்கிட்டேயிருந்தோம். திடீர்னு மைக் அமைதியானது. மடமடன்னு ஆளுங்கள்லாம் எழுந்து சாப்பாட்டு அறைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க.
எங்களுக்கு சங்கடமா போயிட்டது. என்னமோ தப்பு நடந்துடிச்சோ. பதட்டத்தோட மாப்பிள்ளைகிட்ட போனோம். "என்ன நியாஸ்... ஒண்ணும் பிரச்சனையில்லையே?"ன்னு சொன்னேன், மெதுவா.
அவருக்கு சரியா கேக்கலே. "ரொம்ப நன்றி. இருந்து சாப்டுட்டுதான் போகணும்"
"சரி கல்யாணம் முடியட்டும். இப்போ என்ன அவசரம்" என்றேன்.
"சார், கல்யாணம்தான் முடிஞ்சுடிச்சே. நீங்க சாப்பிடப்போங்க.... அப்துல்லா.. சாரை சாப்பிடக் கூட்டிட்டு போ..."
"என்ன... கல்யாணம் முடிஞ்சிட்டுதா... பொண்ணே வரலியே... ஏதாவது பிரச்சனையான்னு கேக்கத்தான் வந்தேன். நீங்க கல்யாணம் முடிஞ்சுடிச்சுன்னு சொல்றீங்க.... ஒண்ணும் புரியலியலியே..."
நியாஸூக்கு புரிந்துவிட்டது. "அப்துல்லா.. சாருக்கு என்ன விவரம்னு சொல்லு..." என்றார் சிரிப்பை அடக்கியபடி.
அப்புறம்தான் தெரிஞ்சது இந்த நடைமுறையெல்லாம். திரும்பி வீட்டுக்கு வந்த பிறகும் இது எங்களுக்கு அதிசமாயிருந்தது. மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் தனித்தனியே கல்யாணமா? ரெண்டுநாளைக்கு இதப்பத்தியே பேசிக்கிட்டு இருந்தோம்.
சரி. அவங்க மதத்தைச்சேர்ந்த வழக்கம். நமக்கு புதுசா பாக்குறதாலே விதியாசமாயிருந்தது. மத்தபடி அதெல்லாம் மதிக்கப்பட வேண்டிய, மரியாதை செய்யப்பட வேண்டிய சமாசாரம்தானே.
இப்போதும் எப்போதாதாவது சந்திக்கும்போது இதை நினைவுபடுத்தி நியாஸ் சிரிப்பார்.
----------------------------------------------------------------------------
அப்போதான் முன்னாடி நடந்த எங்க ஊர் நண்பன் திருப்பதியோட கல்யாணம் நினைவுக்கு வந்தது.
மதுரையிலே கல்யாணத்துக்கு முந்துனநாள் சயந்திரமே எங்க நண்பர்கள் கூட்டமா போயிட்டோம். நடு ராத்திரி ஒரு மணி வரைக்கும் சீட்டாட்டம் நடந்தது. விடியக்காலையிலே கல்யாணம்ங்கிறதாலே எல்லாம் படுத்துட்டோம். நாலு மணிக்கு எழுப்பிவிட்டங்க. மாப்பிள்ளையெ காணல்லே.
"மாப்பிள்ளைக்கு அலங்காரம் நடக்குது. நீங்கள்லாம் குளிச்சுட்டு ரெடியாயிடுங்க தம்பிகளா.."ன்னு ஒரு பெரியவர் சொன்னார்.
முகூர்த்த நேரம் வந்துட்டது. இன்னும் மாப்பிள்ளையை இன்னும் காணலே. நாங்கள்லாம் சுத்தி சுத்தி பாத்துக்கிட்டு இருந்தோம்.
"என்னடா தேடுறீங்க..."ன்னு ஒரு குரல் கேட்டது.
நம்ம திருப்பதியோட குரல்தான். ஆனா ஆளைத்தான் காணலே. அப்போதுதான் பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த பரதேசியை கவனித்தேன். இதோ நம்மாளு. நெத்தியிலே ரெண்டு கலர்லே திருப்பதி வெங்கடேச பெருமாள் போல பெரிய அளவுலே நாமம். போதாததுக்கு நெஞ்சுலெ வேறே அதை விட ரெண்டு மடங்கா இன்னோரு நாமம். தலையிலே ஒரு பெரிய முண்டாசு. வெத்து உடம்புலே இடுப்புலே வெள்ளையா
வரிஞ்சகட்டின வேட்டி மட்டும் பளிச்சுன்னு இருந்தது. அவங்க சமூக வழக்கமாம்.
எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு. "எண்டா இவ்வளோ பெரிய நாமத்தெப் போடத்தான் ரெண்டு மணிக்கே ஒன்னிய கூட்டிட்டு போனாய்ங்களா... யாருடா இதை போட்டுவிட்டாய்ங்கெ?.. நம்ம ராமசாமி கொத்தனாரா... அவருதானே சொவத்துக்கு நல்லா
வெள்ளையடிப்பாரு..... "
திருப்பதியை நாங்களெல்லாம் டிப்டாப்பா பாத்துதான் பழக்கம். மாப்பிள்ளைக்கு கண்ணெல்லாம் கலங்கியிருந்தது. ஒண்ணும் பேசமுடியலே.
கல்யாணம் முடிஞ்சவுடன் அடுத்து போட்டோ எடுத்துக்கொண்டோம். போட்டோகிராஃபரும் எங்க நண்பர்தான். "கொஞ்சம் சிரிங்கப்பா.." என்று சொல்லவேண்டியவர் "சிரிக்காம நில்லுங்கடா... எருமைகளா.." என்று திட்டிக்கொண்டேயிருந்தார்.
--------------------------------------------
மாமனார் ஊருக்கு மறுவீட்டுக்கு போய்விட்டு ஒரு வாரம் கழிச்சி திருப்பதி நாங்கள்லாம் வழக்கமா கூடுற இடத்திற்கு வந்தார். கல்யாண போட்டோவை எங்களிடம் கொடுத்தார். நாங்களும் ஆவலுடன் புரட்டி பார்த்தோம். எல்லா படமும் ஒரே ஷேக்காகி இருந்தது.
"என்னடா இப்பிடி ஆயிடுச்சி..."
"போங்கடா... நாயிங்களா... நீங்க சிரிச்சி சிரிச்சி நாசம் பண்ணுனதாலே..... அந்த போட்டோ பிடிக்கிறவனும் சிரிச்சி தொலைச்சிருக்கான்...." என்றார் பாவமாக.

















