
என்னக் கொடுமை சரவணன். யார் கண்ணில் படக்கூடாது என்று ஒளிந்து கொண்டு திரிந்தாலும், அவர் வந்து என் எதிரே நிற்பது என்பது எனக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. வேறே யாரு.. நம்ம அண்ணன் கந்தசாமிதான்.
"என்னா தம்பி. என்ன இப்படி. ஞாயித்துக்கிளமையும் அதுவுமா.... காலங்காத்தாலே...."
"என்னண்ணா இது. சரவணபவனுக்கு உள்ளே இருந்து கேக்குற கேள்வியா இது....."
"சாப்பிடத்தான்னு தெரியுது. ஏன்... வீட்டிலே கஞ்சி ஊத்தமாட்டேனுட்டங்களா? எனக்கு முன்னாலேயே தெரியும், ஒரு நாள் இப்படி நடக்குமின்னு. அடி பலமா.. உங்களுக்கு"
"அதெல்லாம் நீங்க நினைக்கற மாதிரி ஒண்ணுமில்லெ. அம்மா வீட்டுக்கு கொஞ்ச நாளைக்கு போகனுமின்னு சொன்னாங்க. ரெண்டு நாளைக்கு முன்னாலதான் அனுப்பிச்சேன். குறைகால சந்தோசம்தான்."
"சரி சரி வருத்தப்படாதீங்க. என்ன ஆர்டர் பண்ணியிருக்கீங்க? அதையே எனக்கும் சொல்லிடுங்க தம்பி."
"எனக்கு பிடிச்சதெல்லாம் இட்லியும் வடையும்தான். இங்கே வந்தா நான் எப்பவும் அதுதான். உங்களுக்கும் சாப்பிட அதையே சொல்லிடறேன்."
"ஏன் வேற எதையும் சாப்பிட மாட்டீங்களா?"
அடடா. சொந்த செலவில் சூனியம் வச்சிக்கிறது என்பது இதுதான். இனிமேல் சாப்பிட வேற ஏரியாதான் போகணும் போலிருக்கு. யாரு பெத்த பிள்ளையோ.. நம்மளையே சுத்தி சுத்தி வர்றாரு.
"ஏந்தம்பி... வேறே எதையாவது சாப்பிட்டு பாக்கலாமில்லையா..."
"அண்ணே. சாப்பிடும்போது பேசக்கூடாதுண்ணு பெரியவங்க சொல்லியிருக்காங்க. வேணாம். விட்டுடுங்க. அழுதுருவேன்."
"தம்பி... அதான் இட்லி இன்னும் வரலியே. கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம்."
"எனக்கு இட்லிதான் பிடிக்கும். அதனாலேதான் வேற எதையும் பத்தி யோசிக்கறது இல்லை." ரொம்ப கண்டிப்பாக சொல்லிவிட்டேன்.
சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டேன். 'யோசிப்பது' பத்தி நானே ஆரம்பித்து விட்டேன். இது எங்கே போய் முடியுமோ. இன்னிக்கு நான் மவுனவிரதம்.. யாரோடெயும் பேசுறது இல்லெ.. என்று சொல்லி தப்பிக்கவும் முடியாது. கந்தசாமி இதுக்கும் ஏதாவது கணக்கு வைத்திருப்பார்.
"ஒரு பேச்சுக்கு வச்சிக்குவோம். இட்லி இல்லைனா என்ன பண்ணுவீங்க?"
"அப்போ நீங்க சொன்னா மாதிரி 'மாத்தி யோசிச்சி' தோசை சாப்பிடுவேன்."
"இது 'மாத்தி யோசி' இல்லை. காலத்தின் கட்டாயம். யாராயிருந்தாலும் இதைத்தான் செய்வாங்க. இட்லி கிடைக்கும்போதே வேற ஐட்டத்தை யோசிக்கணும். ஒரு வேளை அது இட்லியை விட உங்களுக்கு ரொம்ப பிடிச்சுப் போயிடலாம் இல்லையா."
தொடர்ந்தார் கந்தசாமி. "வீட்டுலே ஆள் இல்லைன உடனே ஓட்டலைத்தானே நினைச்சீங்க. ஏன், வேற மாதிரி யோசிக்கலே?"
"அண்ணே... அந்த மாதிரி முறை தவறி போற ஆள் நானில்லை."
"தம்பி, நான் அப்பிடி சொல்லலை. அப்பிடி சொல்லமாட்டேன் என்பதும் உங்களுக்கு தெரியும். நான் சொல்வது என்னன்னா, நீங்களே லைட்டான ஐட்டம் எதையாவது செய்ய முயற்சி செய்யலாமில்லையா? எத்தனையோ
ready to use பொருட்கள் கிடைக்குதே."
"ஆமாண்ணே. இது எனக்கு தோணாமலே போயிடுச்சே. என்ன இருந்தாலும் இங்கத்தி டேஸ்ட் வருமா?"
"கொஞ்ச நாள்லே பழகிடுமே. ஒண்ணு சமையல் நல்லா வரலாம். அல்லது அந்த கொடுமையே உங்களுக்கு பழகிடலாம். எப்படீன்னாலும்... காசு மிச்சம்தானே."
"ஆமா கந்தசாமி அண்ணே. நீங்க சொல்லறதும் சரிதான். செலவு அத்துக்கிட்டு போகுது. ஆனாலும் நீங்க சொல்லுறதுலேஒரு சிக்கல் இருக்கு. ஒரு வேளை சமையல் நல்லா பழகிடுச்சின்னா நம்ம கையிலே கரண்டியைக் கொடுத்துடுவாங்களே."
"ஆமா தம்பி. இது யோசிக்க வேண்டிய விசயம். எதுக்கும் ஒரு பாதுகாப்பாத்தான் இருந்துக்கணும். நம்ம வீட்லேயும் ஒரு மார்க்கமாத்தான் இருக்காக. இருந்தாலும் இதுக்கும் 'மாத்தி யோசி' போட்டுட வேண்டியதுதான்.
ஆஹா. இனிமேலும் பொறுப்பதில்லை. "அண்ணே. இட்லி வந்திடுச்சி. இனிமே பேசக்கூடாது. அப்புறம் ஒண்ணு... நான் சாப்பிட்டு முடிச்சதும் மௌன விரதம் ஆரம்பிக்கப் போறேன். யாரோடயும் பேசறது இல்லை."
"அதனாலே என்ன தம்பி. நீங்க பேசாம இருங்க. நான் பேசிட்டே இருக்கேன். பல விசயங்களை உங்களுக்கு சொல்லணுமில்லையா."
"அய்யோ அண்ணே... நான் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க... நான் இன்னிலிருந்து 'கேட்கா விரதம்'னு புதுசா ஆரம்பிக்க போறேன். யார் பேசுவதையும் கேட்கக்கூடாது."
"பரவாயில்லை தம்பி. இதுக்கும் மாத்தி யோசிச்சா வழி கிடைக்கும்.... ஐயோ தம்பி... என்ன தம்பி... மிளகாயை கடிச்சிட்டீங்களா..... கண்ணுலே இருந்து தண்ணியா வடியுது?... ஏன் உடம்பெல்லாம் குலுங்குது?"
A pattern may persist because it is useful and adequate and yet a restructuring of the pattern could give rise to something very much better.
The natural inclination is to search for alternatives in order to find the best one. In lateral thinking however the purpose of the search is to loosen-up rigid patterns and to provoke new patterns.
----- Edward De Bono